கதிரகாம யொகிகளும் அவாகளின் வரலாறும்

19th & early 20th Century mathadhipatis of Teyvanai Amman Devasthanam
19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளிலும் இருந்த தெய்வயானை அம்மன் தேவஸ்தானத்தின் மடாதிபதிகள்.

1950களின் முற்பகுதியில் கதிர்காமத்தில் ஹிந்து யாத்ரீகர்கள்.(1954இல் பால் விர்ஸ் எழுதிய 'கடாரகாமா- இலங்கையின் புனிதத் தலம்' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)
 

காஞ்சி மடம் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (இடப்புறம்), ஜனவரி 2000ஆம் ஆண்டில் பூர்ணானந்த் ஸ்வாமிகளை (நடுவில் உள்ளவர்) கதிர்காமம் தெய்வயானை மடத்தின் மடாதிபதியாகவும், விக்யானந்த் ஆஸ்ரம் ஸ்வாமிகளை (வலப்புறம் இருப்பவர்) துணை மடாதிபதியாகவும், நியமித்தல்.

யாழ்ப்பாணத்திலிருந்து பாதயாத்திரையாக வரும் முத்துக்குமார வேல் ஸ்வாமி (நடுவில் வேலை கையில் வைத்திருப்பவர்) மற்றும் பாதயாத்திரையாக வரும் ஸ்வாமிகளை, ஜூலை 1988இல் ஸூஃபி பாவாக்களும், சந்நியாசிகளும், புத்தத் துறவிகளும், ருஹ்னு கதிர்காமம் மகா தேவாலயத்தின் பிரதான வாயிலில் வரவேற்று கவுரவித்தல். பல நூற்றாண்டுகளாக கதிர்காமம், பல யோகிகள்,முனிவர்கள், சாதுக்கள், பல்வேறு வகையான ஆன்மீக நெறிகளைப் பின்பற்றும் சித்தர்கள் ஆகியோரின் இருப்பிடமாகத் திகழ்கிறது.

பல நூற்றாண்டுகளாக கதிர்காமம், பல யோகிகள்,முனிவர்கள், சாதுக்கள், பல்வேறு வகையான ஆன்மீக நெறிகளைப் பின்பற்றும் சித்தர்கள் ஆகியோரின் இருப்பிடமாகத் திகழ்கிறது. இவர்களில் பெரும்பான்மையோர் தங்களுடைய ஆன்மீகச் சிந்தனைகளையும் அதன் விளைவான அறநெறிகளையும் இப்பூவுலகத்தில் விட்டுச் சென்றார்களேயன்றி தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை. ஒரு சிலர் தத்தம் பெயருடனும் செய்த சாதனைகளுடனும் அறியப்படுகிறார்கள்.

கல்யாணகிரி சுவாமிகள்
கதிர்காம மக்களுக்கு மிகவும் பரிச்சயமான சிறந்த யோகி திரு கல்யாணகிரி சுவாமிகள் ஆவார். கல்யாணகிரி என்ற பெயருடன் மூன்று யோகிகள் இருந்தனர். தற்போதுள்ள மகா தேவாலயத்தை மூன்றாவது கல்யாணகிரி சுவாமிகள் முதலாம் ராஜசிங்க மன்னரின் உதவியுடன் கட்டினார். அவர்தம் குருவின் குருவான முதலாம் கல்யாணகிரி சுவாமிகள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் கதிர்காமக் கடவுளின் மூத்த மனைவியான தேவி தெய்வயானை, வட இந்திய தசநாமி சந்நியாசியான முதலாம் கல்யாணகிரி சுவாமிகளை அணுகி, வட இந்தியாவை விட்டு தெற்கே வந்து, காணாமல் போன தனது கணவரை தேடி அழைத்து வருமாறு கோரினாள்.

கல்யாணகிரி சுவாமிகளும் கதிர்காமத்துக்கு வந்து கதிர்காமக் கடவுளை நினைந்து, நித்திரையைத் தவிர்ப்பதாக விரதம் பூண்டு, கடுமையான தவம் மேற்கொண்டார். தவத்தின்போது அவருக்கு ஒரு வேடுவச் சிறுவனும், சிறுமியும் மனமுவந்து பணிவிடை செய்து வந்தனர்.

பன்னிரண்டு ஆண்டுகள் உறக்கம் தவிர்த்து கடுமையான தவம் செய்தும் கந்தன் தரிசனம் தராததால் நம்பிக்கை இழந்தும், இவ்வளவு உடலை வருத்தித் தவம் இயற்றியதால் சோர்வடைந்தும் அவர் ஒரு நாள் உறங்கத் தொடங்கினார். அப்படி அவர் உறங்கும் நேரத்தில் வேடுவச் சிறுவன் அவரை எழுப்பினான். அதனால் கோபம் கொண்ட சுவாமிகள் அவனை கடிந்து கொண்டார். வேடுவச் சிறுவன் அவரிடம் மன்னிப்பு கோரிவிட்டு வேகமாக ஓடத் தொடங்கினான். சுவாமிகளும் அவனைத் துரத்திக்கொண்டு அவன் பின்னே சென்றார். மாணிக்க கங்கையில் உள்ள ஒரு தீவுக்குச் சென்றதும் சிறுவன் கந்தனாகக் காட்சி அளித்து அவரை ஆனந்தத்தில் ஆழ்த்தினான். அதுவரை தனக்குப் பணிவிடை செய்தவர்கள் கந்தனும் வள்ளியுமே என்றறிந்த துறவியார் பிரமிப்படைந்தார்.

கந்தனைப் பணிந்த துறவியார் அவனிடம் மன்னிப்பு கோரி அவனை தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு வேண்டினார். அச்சமயம் வள்ளிப்பிராட்டி இடை மறித்து தான் தன்னுடைய இனமான வேடர் குல மக்களைப் பிரிந்து வர முடியாது எனவும், தன் கணவனை இந்தியா அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் சுவாமிகளிடம் வேண்டுகோள் விடுத்தாள்.

வள்ளியின் கோரிக்கையை மறுக்க முடியாத துறவியாரும், கந்தனை இந்தியா அழைத்துச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு தானும் அங்கேயே தங்கியதுடன் அங்கு வழிபாட்டிற்காக யந்திரம் ஒன்றை உருவாக்கினார். இன்றுவரை அந்த யந்திரம் வழிபடப்படுவதுடன் கதிர்காமத் திருவிழாவின் போது ஊர்வலமாக எடுத்துவரப் படுகிறது.

கல்யாணகிரி சுவாமிகள் இதன் பிறகு இந்தியாவுக்குத் திரும்பாததுடன், தெய்வயானை தேவியை கதிர்காமத்துக்கு வருமாறு வேண்டினார். தெய்வயானை அம்மையும் அவர் வேண்டுகோளுக்குச் செவிமடுத்து கதிர்காமத்தை வந்தடைந்தார். அன்றுதொட்டு மூவரும்  மகிழ்ச்சியாக இணைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தசநாமி முறை வழிபாடுகளும், தெய்வயானை அம்மை தேவஸ்தானமும் எட்டாம் நூற்றாண்டுக்கும் பதினாறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டஒரு காலகட்டத்தில் முதலாம் கல்யாணகிரி சுவாமிகள் காலத்தில் தொடங்கியுள்ளன.

கல்யாணகிரி சுவாமிகள் தெய்வயானை அம்மன் தேவஸ்தானத்தை நிறுவிய நாளிலிருந்து வட இந்தியாவைச் சேர்ந்த தசநாமி பரம்பரை மடாதிபதிகளால் தொடர்ச்சியாக தேவஸ்தானமும் அதைச் சார்ந்த ஆலயங்களும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கல்யாணகிரி சுவாமிகளின் ஜீவசமாதிக்குப் பிறகு அவருடைய உடல் சுயம்பு லிங்கமாக மாறியது. அந்த லிங்கம் முத்துப் போன்ற வடிவத்தில் இருந்ததால் அவர் முத்துலிங்க சுவாமி என்றும் அழைக்கப்படுகிறது.
ஜெயசிங்ககிரி சுவாமிகள்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயசிங்ககிரி சுவாமிகள் 18-19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ருஹுனு கடாரகாம மஹா தேவாலயத்தைக் கட்டிய மூன்றாம் கல்யாணகிரி சுவாமிகள் இவருடைய குருவின் குருவாகும். இலங்கை மருத்துவ சேவையைச் சேர்ந்த டாக்டர் ஜான் டேவி என்பவர் 1819இல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் ப்ரௌனிங் என்பவருடன் மத்திய மற்றும் உவா மாகாணங்களுக்குச் சென்ற போது, சுவாமியுடன் நிகழ்ந்த சந்திப்பை 1821இல் வெளிவந்த இலங்கை வரலாறு என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.

கதிர்காமக் கடவுளின் வரைபடத்துடன் உள்ள கருங்கல்லினாலான ஷட்கோண யந்திரம். ஓம் என்ற தமிழ் எழுத்து நடுவிலும் சுற்றிலும் நெருப்பின்  ஜ்வாலைகளும் பொறிக்கப்பட்டுள்ளன .ஸ்விட்சர்லாந்து நாட்டில் பேசல் நகரத்தில் உள்ள கிராமியக் கலைகளின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஜெர்மானிய எழுத்தாளர் பால் விர்ஸ் எழுதிய 'கடாரகாமா: இலங்கயின் புனிதத்தலம்' என்ற புத்தகத்தின் ஆங்கிலமொழிபெயர்ப்பிலிருந்து நகல் எடுக்கப்பட்டது. இப்புத்தகத்தை டோரிச் பெர்டா ப்ரால் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.

ஜெயசிங்ககிரி சுவாமிகள் தன்னுடைய குருபரம்பரையைப் பற்றி மிகவும் பக்தி பூர்வமாகவும், உற்சாகத்துடனும் பேசுவது அவருடைய விசுவாசத்தைக் காட்டுவதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயசிங்ககிரி சுவாமிகள் தோற்றத்தில் உயர்ந்த மெலிந்த தேகத்துடன் முகத்தில் நீண்ட வெண்மையான தாடியுடனும் வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்டார். அவருடைய கரிய, பெரிய விழிகள் அவருடைய மெலிந்த முகத்துக்கு ஒளி கூட்டுவனவாகவும், உத்வேகத்துடனும் காணப்பட்டன. முதுமைத் தளர்ச்சி சற்றும் இல்லாது திடமாக இருந்தார் என்று கூறுகிறார்.

பாலசுந்தரி
ஒரு வட இந்திய மன்னருக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் பாலசுந்தரி. நெடுநாட்களாக மகப்பேறு இல்லாத அரசன், தனக்குப் பிறக்கும் முதல் குழந்தையை கதிர்காமக் கடவுளின் தொண்டுக்கு அர்ப்பணிப்பதாக மன்னன் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி அளித்த பரிசாகப் பிறந்தவள் பாலசுந்தரி. குழந்தை பிறந்ததும் அரசன் தன் நேர்த்திக் கடனை மறந்துவிட்டான். இறைவன் அவன் வேண்டுதலை நினைவூட்டி அரசனை கடுமையாக எச்சரித்தான். அதன்பின் அரசன் குழந்தை பாலசுந்தரியை தகுந்த பரிவாரங்களுடன் கதிர்காமத்தில் விட்டுச் சென்றான். அவளும் உலக ஆசைகளைத் துறந்து, ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டு தன்னை முழுவதுமாக ஆன்மீகப்பணிகளுக்கு அர்ப்பணித்துக் கொண்டாள். பாலசுந்தரி அழகுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினாள். அவள் அழகைப்பற்றிக் கேள்விப்பட்ட கண்டியின் அரசன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். அவள் அதை மறுத்தபோது அவளை பலவந்தமாகக் கொணர படைகளை அனுப்பினான்.அவள் வணங்கும் கதிர்காமக் கடவுளின் அருளால்  1814இல் கண்டி ஆங்கிலேயர்களின் தாக்குதலுக்கு ஆளாகியது. போரின் இறுதியில் அரசன் சிறை பிடிக்கப்பட்டு தென்னிந்தியாவில் உள்ள வேலூருக்கு நாடு கடத்தப்பட்டார். இவ்வாறாக கண்டி அரசனின் மூர்க்கத்தனமான செயலால் பாலசுந்தரியின் துறவு வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படாதவாறு கதிர்காமக் கடவுளின் கருணை காப்பாற்றியது. பாலசுந்தரி பிறகு வெகுநாட்கள் மக்களின் அன்புக்கும், வணக்கத்துக்கும் பாத்திரமாக வாழ்ந்து, மங்களாபுரி சுவாமிகளை பீடத்தில் அமர்த்திவிட்டு கதிர்காமத்தில் சமாதி அடைந்தார்.

மங்களாபுரி சுவாமிகள்
வாரணாசியைச் சேர்ந்த மங்களாபுரி சுவாமிகள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த யோகியாவார். அவர் அம்பாந்தோட்டையின் அரசாங்க பிரதிநிதியான இ.எ. கிங் என்பவரை 1870இல் சந்தித்தார். திரு கிங் சுவாமிகளைப்பற்றி பின் வருமாறு எழுதுகிறார். "இந்த ஆலயத்தில் வாரணாசியைச் சேர்ந்த மற்றுமொரு அந்தணரைச் சந்தித்தேன். ஆங்கிலம் பேசிய அவர் இனிய சுபாவம் மிக்கவராக இருந்தார். 1857இல் நடந்த சிப்பாய்க் கலகத்தில் இவர் லக்னௌவில் இருந்த வீரர்களுக்கு உணவு விநியோகம் செய்ததாகக் கூறினார். எண்பது வயது போல் தோற்றமளிக்காது இளமைப்பொலிவுடன் இருந்தார்." மங்களாபுரி சுவாமிகள் 1873இல் இப்பூவுலகை நீத்தார். அதன்பின் கேசோபுரி சுவாமிகள் பீடத்துக்கு வந்தார்.

Pal Kudi Bawa பால்குடி பாவா
பால்குடி பாவா

கேசோபுரி சுவாமிகள் (பால்குடி பாவா)
ஏறத்தாழ சுமார் முக்கால் நூற்றாண்டு கேசோபுரி சுவாமிகள் கதிர்காமத்தில் வாழ்ந்தார். அவர் பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததால் இலங்கையில் அவர் 'பால் குடி பாவா' என்றழைக்கப்பட்டார். வட இந்தியாவிவைச் சேர்ந்த உயர்ந்த அந்தணர் குலத்தில் தோன்றிய அவர் இளம்பிராயத்திலேயே அலஹாபாதில் உள்ள தசநாமி மடத்தில் 1820களில் துறவு வாழ்க்கையைத் தழுவினார். துறவில் மிகுந்த நாட்டம் கொண்ட அவர், இந்தியா முழுதும் பயணம் செய்த பின், கதிர்காமத்தில் உள்ள தெய்வயானை அம்மன் தேவஸ்தானம், தவவாழ்க்கைக்கு ஏற்ற இடமாக இருந்ததால் அதனுடன் இணைந்துவிட்டார். சில வருடங்கள் கடந்தபின் அவர் காட்டின் தனிமையை விரும்பி ஏற்றார். சில காலத்துக்குப் பின் சூரஜ்புரி சுவாமி என்ற இளைய துறவி காட்டில் அவரைக் கண்டு அவ்ருக்கு அரிசியாலான உணவு சமைத்து அளித்துப் பணிவிடை செய்தார். வெகு விரைவிலேயே அவர் திட உணவைத் தவிர்த்து சிறிது பால் மட்டுமே அருந்தி வந்ததால் அவர் 'பால் குடி பாவா' என அழைக்கப்பட்டார்.

     தெய்வீக அழகுடன் திகழ்ந்த இத்துறவி தன்னுடைய ஆன்மீக அறிவு, பக்தி, குழந்தைத்தனமான எளிமை, உண்மை ஆகிய நற்குணங்களால் மக்கள் மனங்களில் இடம் பெற்றார். மக்கள் அவர்தம் ஆசியைப் பெற பெரிதும் விழைந்தனர். அவர் தெய்வயானை அம்மன் ட்ரஸ்டை  1898ஆம் ஆண்டில் முறைப்படி அமல்படுத்திவிட்டு அவ்வருடமே கொழும்புவில் சமாதி எய்தினார்.

சூரஜ்புரி சுவாமிகள்
பால்குடி பாவாவின் ஆன்மீக வாரிசான சூரஜ்புரி சுவாமிகள் அற்புதமான உடலமைப்பு பெற்றிருந்தார். சிறந்த அறிவாளராகவும், பக்திமானாகவும் விளங்கினார். அவர் காஷ்மீர் மஹாராஜாவிடம் ராணுவ அதிகாரியாகப் பணி புரிந்தவர். எளிமையாகவும், துறவியாகவும் வாழ விரதம் பூண்டிருந்த அவரை அவருடைய உற்றார் உறவினர்கள் திருமணம் செய்துகொண்டு ஒரு சாதாரண மனிதனாக வாழ வற்புறுத்தினர். உடன்பட மறுத்த அவரை சம்மதிக்கச்செய்ய மஹாராஜாவின் உதவியை நாடினர். அத்தருணத்தில் சுவாமிகள் தன் வேலையை விட்டு சந்நியாசியாக பயணம் செய்து தென்கோடியிலுள்ள புனிதத்தலமான இராமேஸ்வரத்தை அடைந்தார். அங்கு ஒரு தெய்வீக அசரீரி அவரை ஸ்ரீபாதாவுக்கு புறப்படும்படி பணித்தது. ஸ்ரீபாதாவில் இருக்கும்போது அவருக்கு கதிர்காமம் செல்லும்படியும், அங்கு அவர் காணும் சந்நியாசிக்கு சோறு அளிக்கும்படியும் வாக்கு வந்தது. அவ்வாக்கின்படி அவ்ர் காட்டில் கண்ட சந்நியாசிதான் அவரின் குருவான பால்குடி பாவா.

தெய்வயானை அம்மன் தேவஸ்தானத்தின் குரு ஆசனத்திற்கு அருகில் பால்குடி பாவாவின் உடலும் மற்றும் அவருடைய வாரிசான பல சீடர்களின் உடலும் அடக்கம் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு உள்ளது.


English version of this article

For more information about Pal Kudi Bawa and other sages of Kataragama, as well as about Teyvayanai Amman Kovil and Madam, e-mail to D.M. Swaminathan: dmswaminathan@gmail.com.

The Life of Pal Kudi Bawa of Kataragama
"Śrī Kalyanagiri and the Kalyana Mandapa"
Teyvanai Amman Temple: Past and Present

"Kriya Babaji and the ancient Kataragama shrine"
Regional Directory of India

home